Pages

ஜோதிடரை அணுகுபவர்

இது ஜோதிடத்தில் நம்பிக்கை கொண்ட சாதாரண மக்களுக்கான பதிவு . வாழ்க்கை முழுவதும் ஜோதிடம் பார்த்து அதில் நம்பிக்கை குறைந்து போனவர்களுக்கும் ஜோதிடம் பார்த்துப் பார்த்துப் பாதி ஜோதிடராக மாறிப் போனவர்களுக்குமான பதிவு ஜோதிட நம்பிக்கை கொண்டவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் நிறையவே உள்ளன. அவை தீர்க்கப்படாமலும் உள்ளன. ஏழரைச்சனி, அட்டமத்துச்சனி, விரயகுரு, பாதகாதிபதிதசை, கேந்திராதிபத்திய தோஷம், சர்ப்பதோஷம் என்று மக்களைக் குழப்பத்திலாழ்த்தும் நிறைய வார்த்தைகள் இங்கே உண்டு. எது எப்படியானாலும் இச்சாஸ்திரத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள்தாம் இங்குப் பெரும்பான்மையாக உள்ளனர். அவர்களது இந்தச் சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும் வகையில் ஒரு விவாத மேடையை உண்டாக்குவதும் ஜோதிட சாஸ்திரத்தின் உண்மையான ஆழ அகலங்களைப் புரிந்து கொள்ளத் தவிக்கும் ஆன்மாவாக யாரேனும் இருப்பின் அவரை உலகுக்கு அறிமுகப்படுத்துவதுமே இந்த பதிவின் நோக்கம்.
இச்சாஸ்திரம் எப்போது எந்த நாட்டில் தோன்றியது எப்படிப் பெரும்பான்மை மக்களின் நம்பிக்கைக்கு உரியதாக வளர்ந்தது என்பதெல்லாம் நமக்குத் தற்போது தேவையில்லாத விஷயங்கள். சமீபகாலமாக ஜோதிட நம்பிக்கை ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் குறுக்கிட்டு எவ்வளவு தூரம் அவர்களை ஆட்டிப்படைக்கிறது என்பதை முதலில் தெரிந்து கொள்வோம். முதலில் ஜோதிடர், ஜோதிடரை அணுகுபவர் கிரகநிலைகளைக் குறிக்கும் பஞ்சாங்கங்கள் - இவை மூன்றையும் பற்றி விரிவாகப் பேசலாம்.
பஞ்சாங்கங்கள்:
நமது தமிழ்நாட்டுக்குள் பலவகையான பஞ்சாங்கங்கள் புழக்கத்தில் உள்ளன. குறிப்பிட்ட சில மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பஞ்சாங்கங்களே பயன்படுத்தப்படும். ஏனைய பஞ்சாங்கங்கள் அங்கே செல்லுபடி ஆகாது. சென்னையில் பாம்புப் பஞ்சாங்கம், வேலூரில் ஆற்காட்டுப் பஞ்சாங்கம், திருநெல்வேலியில் திருநெல்வேலி வாக்கியப் பஞ்சாங்கம் என்பவை வழக்கில் உள்ளவை. இவை தவிர ‘திருக்கணிதமுறையைப் பின்பற்றும் பஞ்சாங்கங்களாக சில வெளிவருகின்றன. வாசன் பஞ்சாங்கம் ஆசார்யாள் மடத்துப் பஞ்சாங்கம் என்பவை அவற்றில் சில. ‘திருக்’ கணிதமுறைப் பஞ்சாங்கங்களைவிட வாக்கியப் பஞ்சாங்கங்களைப் பின்பற்றுபவர்களே அதிகம். நாட்காட்டிகள் வாக்கியப் பஞ்சாங்கப்படியே தயாரிக்கப்படுகின்றன. ‘திருக்கணிதபஞ்சாங்கப்படியான கிரகப் பெயர்ச்சிகளைவிட வாக்கியப் பஞ்சாங்கப்படியான கிரகப் பெயர்ச்சிகளுக்கே ‘மவுசு அதிகம். இந்த இரண்டில் எந்தப் பஞ்சாங்கம் சரியானது என்பதைப் பிறகு பார்க்கலாம். இப்போது பஞ்சாங்கங்களில் உள்ள பொருளடக்கம் பற்றிப் பார்க்கலாம்.
நாள் நட்சத்திரம் திதி கரணம் யோகம் என்ற ஐந்து விஷயங்கள் பஞ்சாங்கத்தில் இருக்கும். நட்சத்திரம் திதி கரணம் யோகம் இவை முடியும் நேரம் மட்டுமே குறிக்கப்பட்டிருக்கும். ஒரு நட்சத்திரம் முடியும் நேரத்தில் அடுத்த நட்சத்திரம் ஆரம்பிக்கின்றது என்பதை நாமாகப் புரிந்து கொள்ள வேண்டும். இவற்றில் கரணம் யோகம் என்ற இரண்டுக்கும் என்ன பலன் என்பதை யாரும் அறியார். திருமண நாளுக்கு முகூர்த்தம் பார்க்கும் போது ‘பஞ்சக சுத்தி’ என்று ஒன்று பார்ப்பார்கள். இதில் கூடக்கிழமை நட்சத்திரம் திதி முதலியவைதான் கணக்கில் எடுக்கப்படுமே தவிர கரணம் யோகம் இவற்றைக் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. இருந்தாலும் அவை தொடர்ந்து பஞ்சாங்கங்களில் இடம் பெற்று வருகின்றன. இவை தவிர கௌரி பஞ்சாங்கம், ஹோரை பற்றிய விவரங்கள், படுபட்சி விவரங்கள், குளிகன் உதயமாகும் நாழிகைகள், தசவிதப் பொருத்தங்களுக்கான விவரங்கள், தசாபுத்தி அறியும் அட்டவணை முதலியனவும் பஞ்சாங்கங்களில் தவறாது இடம் பெறும்.
ஆனால் பஞ்சாங்கங்களில் கட்டாயமாக இருக்க வேண்டிய நிறைய விஷயங்கள் தற்போதைய பஞ்சாங்கங்களில் இல்லை. மேஷ ராசியின் ஆரம்பத்திலிருந்து ஒவ்வொரு கிரகமும் சென்றிருக்கும் தூரம் (இதைத்தான் கிரகஸ்புடங்கள் என்று சொல்கின்றார்கள்) வான நடுக்கோட்டுக்கு வடக்கே செல்கின்றதா அல்லது தெற்கே செல்கின்றதா என்பதைக் குறிக்கும் கிராந்தி (Declination) சூரியப் பாதைக்கு வடக்கே அல்லது தெற்கே உள்ளதா என்பதைக் குறிக்கும் விட்சேபம், (Latitude) கிரகங்கள் உதயமாகும் நேரம், உச்சிக்கு வரும் நேரம், மேற்கில் மறையும் நேரம் இவை எல்லாமும் பஞ்சாங்கத்தில் இடம் பெற வேண்டும். ஆனால் ‘திருக்’ கணித பஞ்சாங்கங்களில் கிரகஸ்புடங்கள் மட்டுமே குறிக்கப்படுகின்றன. சூர்யோதய நேரமும் அஸ்தமன நேரமும் குறிக்கப்பட்டு வரும் வாக்கியப் பஞ்சாங்களில் ஏனைய கிரகங்களின் உதய அஸ்தமன நேரங்கள் குறிக்கப்படுவதில்லை. பதிலாக எந்த ஊர்க்கோவிலில் எந்த நாளில் கொடியேற்றம், தேரோட்டம், பூப்பல்லக்கு, வளைகாப்பு உத்சவம், எண்ணைக்காப்பு உத்சவம், புஷ்பாஞ்சலி முதலிய சகல விஷயங்களும் இருக்கும் ஒரு ‘கைடு’ ஆகப் பஞ்சாங்கங்கள் மாறிவிட்டன.
தற்காலச் சோதிடர்கள்:
ஜோதிடர்களில் பெரும்பான்மையோர் தங்களிடம் பரிசீலனைக்கு வரும் ஜாதகங்களைச் சரிபார்ப்பதே இல்லை. ஜாதகர் பிறந்தநாளில் ஜாதகத்தில் குறிக்கப்பட்டிருக்கும் கிரகநிலைகள் சரியாக இருக்கின்றனவா நவாம்ச சக்கரம் சரியாக இருக்கின்றதா என்பதையெல்லாம் பார்க்காமலேயே பலன் சொல்ல ஆரம்பித்துவிடுகிறார்கள். நல்லதசை நடக்கின்றதே ஆனால் எதிர்பார்த்தபடி பலன் செய்யவில்லையே எனக்கேட்டால் கோசாரப்படி கிரகங்கள் சரியில்லையென்றும் ஏழரைச்சனி, அட்டமத்தில் குரு, லக்னத்தில் பாம்பு என்பதாகவும் கூறிவிடுவார்கள். கோசாரம் நல்லதாக இருக்கின்றதே எனக் கேட்டால் தசாபுத்தி சரியில்லையெனச் சொல்லுவார்கள். எல்லாம் உத்தமமாக இருந்தும் ஏன் பலனில்லை எனக் கேட்டால் குழந்தையின் ஜாதகப் பலன்தான் கஷ்டங்களுக்குக் காரணம் என்று சொல்லிவிடுவார்கள். இல்லையென்றால் இருக்கவே இருக்கிறது பூர்வபுண்ய பலன்! பூர்வபுண்ய பலன் நன்றாக இல்லை அந்தக் கோயிலுக்குப் போய் பரிகாரம் செய் இந்தத் தெய்வத்துக்குப் பரிகாரம் செய் என்று கூறித் தப்பித்து விடுவார்கள். அநேகமாகத் தமிழ்நாட்டின் சந்துபொந்துகளில் உள்ள அனைத்துக் கோயில்களும் பரிகாரத் தலங்களும் இவர்களுக்கு மனப்பாடமாக ஆகியிருக்கும். பூர்வபுண்ய பலனை அளக்கும் கருவி ஏதாவது ஒன்றை வைத்திருப்பார்களோ என்னவோ?
சோதிடம் பார்க்கப் போகின்றவர்கள்:
இவர்களில் இரண்டு வகை உண்டு. முதல் வகை ஜாதகத்தைப் பற்றிய எந்த விவரமும் தெரியாத சாமான்யர்கள். இரண்டாவது வகை ஜாதகம் பார்த்துப் பார்த்துப் பாதி ஜோதிடராக மாறிவிட்டவர்கள். முதல் வகையினர் எப்போதும் ஒருவித அச்சத்திலேயே இருப்பார்கள். ஜோதிடர் எந்தப் பரிகாரம் சொன்னாலும் செய்துவிடுவார்கள். எந்தக் கோயிலுக்குப் போகச் சொன்னாலும் போவார்கள். சனி என்றாலும் ராகு கேது என்றாலும் பெயரைக் கேட்டவுடனேயே பயந்துவிடுவார்கள். பரிகாரத்துக்காக எவ்வளவும் செலவழிப்பார்கள். இரண்டாவது வகையினருக்குத் தைரியம் அதிகம் . இவர்கள் ஒரு ஜாதகத்தைக் கொடுத்துவிட்டு ஒன்பது கேள்விகள் கேட்பார்கள். நம்மைவிட இவர் அதிகம் படித்திருப்பாரோ என்று ஜோதிடரையே நினைக்க வைக்கும் அளவுக்குப் பேசுவார்கள். ராஜயோகம் நீசபங்க ராஜயோகம் தர்மகர்மாதிபதி யோகம் என்று தங்களுக்குத் தெரிந்த வார்த்தைகளையெல்லாம் சொல்லி ஜோதிடரையே மலைக்க வைப்பார்கள். அவர் இவர்களிடம் பரிகாரம் சொல்லமாட்டார். பூர்வபுண்யபலன் என்றெல்லாம் சொல்லி இவர்களை மிரட்டமுடியாது. உங்களுக்கு ஆறில் சனி உங்களையெல்லாம் யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்று ஜோதிடரே இவர்களை தாஜா செய்யும் அளவுக்குப் போனபின்னரே இவர்கள் அமைதியாவார்கள். அதுவரை இவர்கள்தாம் பேசுவார்கள். ஜோதிடர் கேட்டுக் கொண்டிருப்பார். செவ்வாய் வக்ரமாகிவிட்டான் இல்லையென்றால் நான் எங்கேயோ போயிருப்பேன் என்றெல்லாம் வாய்ச்சவடால் அடிப்பார்கள். ஜோதிடரும் இம்மாதிரி ஆட்களிடம் அதிகம் பேசுவதில்லை. கொடுப்பதை வாங்கிக்கொண்டு சீக்கிரமே இவர்களைக் கிளப்பிவிடத்தான் பார்ப்பார்.
இப்படித்தான் இருக்கின்றன இன்றைய பஞ்சாங்கங்கள்!
இப்படித்தான் இருக்கின்றார்கள் ஜோதிடர்களும் ஜோதிடர்களை அணுகி ஆலோசனை கேட்பவர்களும் !
இவையெல்லாம் மாற வேண்டும். பஞ்சாங்கங்கள் மாற வேண்டும். பரிகாரம் சொல்வதைவிட்டு ஜாதகம் பார்க்க வருபவரின் உண்மையான கேள்விக்கு ஜாதக அடிப்படையில் தனக்குத் தெரிந்த பதிலைக் கூசாமல் சொல்பவரே நமக்குத் தேவையான ஜோதிடர். ஜாதகம் பார்க்கப் போகின்றவர்கள் தங்களது கேள்வியைத் தெரிவித்துவிட்டு ஜோதிடரின் பதிலுக்காகப் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும். மகன் அல்லது மகளின் திருமணம் பற்றிக் கேள்வி கேட்பவர்கள் திருமணம் எந்தக் கிரகத்தின் தசையில் எந்தக் கிரகத்தின் புத்தியில் எந்தக் கிரகத்தின் அந்தரத்தில் நடைபெறும் என்ற கேள்வியை மட்டும் கேட்டுவிட்டு ஜோதிடரின் பதிலுக்காகப் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும். ஏன் திருமணம் தாமதமாகிறது என்ன தோஷம் என்றெல்லாம் கேட்டு ஜோதிடரின் கவனத்தைத் திருப்பக் கூடாது. தாமதத்திற்குக் காரணம் தெரிந்து என்ன ஆகப் போகிறது? எப்போது நடக்கும் என்று மட்டும் தெரிந்தால் போதும். அவராகப் பரிகாரம் சொல்ல ஆரம்பித்தால் பரிகாரம் செய்து எவ்வளவு நாளைக்குள் திருமணம் நடக்கும் என்ற பதிலையும் கேட்டுப் பெற வேண்டும். புராணங்களில் முனிவர் ஏதாவது சாபமிட்டால் சாபம் பெறுபவர் சாபவிமோசனத்திற்கு வழிகேட்பது வழக்கம். அதுபோலப் பரிகாரங்கள் செய்தால் பரிகாரம் செய்து எவ்வளவு காலத்துக்குள் ஜாதக பலன் நடைபெறும் என்றும் ஒரு விதி இருக்க வேண்டுமே? அதையும் ஜோதிடரே சொல்லட்டும். பொதுவாக ஜோதிடத்தைப் பற்றி சிந்திக்கும் பொழுது பின்வரும் கேள்விகள் மனதில் எழும்:
எனக்கு எப்பொழுது திருமணம் நடக்கும்?
எனக்கு காதல் திருமனம் நடக்குமா அல்லது பெற்றோர் பார்த்து திருமனம் நடக்குமா?
எனக்கு எப்பொழுது வேலை கிடைக்கும்?
எனக்கு வீடு கட்ட உகந்த காலம் எது?
எனக்கு புத்திர பாக்கியம் உண்டா? எப்பொழுது கிடைக்கும்
என் கடன் பிரச்சனைகள் எப்பொழுது தீரும்?
எந்த தொழில் அல்லது வியாபாரம் எனக்கு உகந்தது?
நன் வெளிநாட்டிற்கு சென்று வேலை பார்க்க முடியுமா?
நான் மிகபெரிய பணக்காரன் ஆவேனா?
நான் மிகபெரிய தொழில் அதிபர் ஆவேனா?
நான் அரசியலில் புகழ்/பதவி பெறுவேனா?
நான் சினிமா/கலை துறையில் புகழ் பெறுவேனா?
எனக்கு இரண்டாவது மனைவி யோகம் உண்டா?
பரம்பரை சொத்துகள் கைக்கு வருமா?
தன, தானிய சேர்கை எப்பொழுது கிடைக்கும்
வாகன யோகம் உண்டா? எப்பொழுது?
எனது நோய் எப்பொழுது தீரும்?
மன அமைதி எப்பொழுது கிடைக்கும்?
எனது பெயர் நிமராலஜி படி இருக்கிறதா?
எனக்கு உகந்த அதிர்ஷ்ட கற்கள் யாவை?
எனக்கு உகந்த அதிர்ஷ்ட நிறங்கள் யாவை?
எனக்கு உகந்த அதிஷ்ட நாட்கள் யாவை?
என்னுடைய தசா புத்தி பலன்கள் எனென்ன?
என் குழந்தைகு என்ன பெயர் வைக்கலாம்?
என் ஜாதகத்தில் உள்ள யோகங்கள் என்னென்ன? அவற்றின் பலன்கள் யாவை?
நன் செயய வேண்டிய பரிகாரங்கள் எனென்ன?
நான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய காலம் எது?
கடைசியாகச் சில விஷயங்கள்:
வார ராசிபலன்கள் மாத ராசி பலன்கள் என்று வெளியிடப்படுபவை நம்பிக்கைக்கு உகந்தவைதானா?
கோசார பலன் வேறு அஷ்டவர்க்கப் பலன் வேறு என்று வந்தால் எதைக்கொள்வது?
கம்ப்யூட்டரால் எழுதப்படும் ஜாதகங்களில் ‘லக்ன பாவம்’ என்று ஒரு கட்டம் குறிப்பிடப்படுகின்றதே அதன் அர்த்தம் என்ன?
ராசிக்கோ அல்லது ஏழாமிடத்துக்கோ குருவின் பார்வை இல்லாத போது திருமணம் நடைபெறும் சாத்தியம் இல்லையா?
பித்ரு ஸ்தானம் என்பது ஒன்பதாமிடமா அல்லது பத்தாம் இடமா?
பெண்களின் புத்திரஸ்தானம் ஐந்தாமிடமா அல்லது ஒன்பதாம் இடமா?
பத்துப் பொருத்தங்களும் பொருந்திச் செய்த திருமணங்கள் முறிந்து போவது ஏன்?
பொருந்தாத நட்சத்திரங்களில் பிறந்து மணம் செய்துகொண்டவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகப் போகிறதே இதற்கு என்ன காரணம்?
பிரஷ்ன (பிரசன்னம் அல்ல) ஜாதகத்தால் எல்லாக் கேள்விகளுக்கும் விடை பெற இயலுமா இயலாதா?
இப்படிப் பல கேள்விகளுக்கு விடைகள் கிடைக்காமல் ஜாதகம் பார்ப்பது என்பது வீண் வேலையாகத்தான் இருக்கும்.
செவ்வாய் தோஷம் காலசர்ப்ப யோகம் திருமணம் நடந்த தேதியினால் வரும் கெட்ட பலன்கள் (எண் கணித முறைப்படி) பெயரை மாற்றிக்கொள்வதால் தீரும் கஷ்டங்கள் "வருகின்ற நல்ல பலன்கள் குலதெய்வம் பரிகாரம்" கிரகங்கள் நல்லமுறையில் இடம் பெறும் நாட்களில் சிசேரியன் செய்து குழந்தைகளை எடுக்கும் பழக்கங்கள் என்று என்னென்னவோ கேலிக்கூத்துக்கள் அரங்கேறிக் கொண்டிருக்கும் இந்த நாட்களில்
பழைய நூல்களில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களை நன்கு ஆராய்ந்து கிரகஸ்புடங்கள் செய்து தீவிரமான பரிசீலனைக்குப் பிறகு ஜாதக பலன்களைச் சொல்ல வேண்டிய ஜோதிடர்.
தேவையற்ற கேள்விகளைக் கேட்காமல் பிரதானமாக ஒரு கேள்வியை மட்டும் கேட்டுப் பதிலுக்காக பொறுமையாகக் காத்திருக்கும் வாடிக்கையாளர்.
வானசாஸ்திரத்தின் அனைத்து விவரங்களையும் பூரணமாகத் தந்து சரியான வழியில் நமக்கு உதவும் பஞ்சாங்கங்கள்.
- இவர்களே நமக்குத் தேவை.


No comments:

Post a Comment